November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.பருத்தித்துறையில் இரண்டு ஆலயங்கள் மூடப்பட்டன

யாழ்ப்பாணம்,பருத்தித்துறையில் அமைத்துள்ள இரண்டு இந்து ஆலயங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழிபாடுகள் அனைத்தும் 14 நாட்களுக்கு இடை நிறுத்தப்பட்டு மூடப்பட்டன.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

பருத்தித்துறை சுப்பர்மடம் முனியப்பர் ஆலயம், பருத்தித்துறை சிவன் ஆலயம் என்பனவே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டன.

பருத்தித்துறை முனியப்பர் ஆலயத்தில் இரதோற்சவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை, அதிகளவான பக்தர்கள் பங்கேற்றமை மற்றும் அவர்கள் முகக் கவசம் அணியாமை உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமை தொடர்பில் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு ஒளிப்படத்துடன் முறைப்பாடு வழங்கப்பட்டது.

அது தொடர்பில் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனடிப்படையில் சுகாதார நடைமுறைகளை பேண தவறியதால் ஆலயத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை வழிபாடுகளை நிறுத்தி மூடுவதற்கு அறிவித்தல் ஒட்டப்பட்டது.

அதேபோன்று,பருத்தித்துறை சிவன் ஆலயத்திலும் சுகாதார நடைமுறைகளை மீறி வெளி வீதியில் திருவிழாவை நடத்தியதால் அந்த ஆலய வழிபாடுகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடைநிறுத்த அறிவித்தல் வழங்கப்பட்டது.

அத்துடன், ஆலய நிர்வாகிகளும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.