இலங்கையில் டெல்டா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் வீதம் 1.5 ஆக காணப்படுவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட் -19 டெல்டா மாறுபாடு நாட்டில் வேகமாக பரவி வருவதால் நாட்டில் ஒவ்வொருவரும் தொற்றுக்குள்ளாகும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“டெல்டா” தொற்றுக்குள்ளாகுபவர்களில் அதிகமானவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையிலிருந்து தப்புவதற்கு ஒவ்வொருவரும் கூடிய விரைவில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றுவதோடு, அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வெளியில் செல்வதையோ பொது மக்கள் கூடும் நிகழ்வுகளில் பங்கு பற்றுவதையோ தவிர்க்கும்படி அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் பணிகளுக்கு சமுகமளிக்க வேண்டாம் என்பதோடு, தமது அன்புக்குரியவர்களை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிதல், கைகளை சவர்க்காரம் இட்டு கழுவுதல் உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை பேணி பொறுப்புடன் செயற்படுமாறு பொது மக்களிடம் மேலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.