November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு பணி நிறைவு

கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

கிளிநொச்சி விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது

இந்த நிலையில் குறித்த பகுதியில் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் இருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அணைக்கட்டு காணப்படும் நிலையில், அந்த அணைக்கட்டை அகற்றிய போதே குறித்த இராணுவ சீருடை, மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி லெனின் குமார் பார்வையிட்டதுடன், விசாரணைகளை மேற்கொண்டார்.

அதனடிப்படையில் மேலும் எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய அகழ்வுப் பணிகள்  முன்னெடுக்கப்பட்டதுடன், ஒரு கைக்குண்டு, தொடர்பாடல் சாதனம், இரண்டு தலைக்கவசங்கள், ரவைக்கூடுகள், உடைகள் மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தும் உணவு பொதிகள் உள்ளிட்ட பொருட்களின் எச்சங்களுடன், மனித எச்சங்களும் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட எச்சங்கள் அனைத்தும் 25 ஆண்டுகள் பழமையானவையாக இருக்கலாம் எனவும், மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட தடய பொருட்கள் அனைத்திலும் 97ஆம் ஆண்டுக்கு முற்பட்ட திகதியிடப்பட்ட பொருட்களாகவே காணப்பட்டுள்ளது.

இந் நிலையில் இரண்டும் ஒப்பீட்டளவில் ஒரே காலப்பகுதியை சேர்ந்தவையாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு கிளிநொச்சி மாவடட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் செயலிழக்க செய்யப்படவுள்ளதாகவும், அது தற்பொழுது பாதுகாப்பாக விசேட அதிரடிப்படையினரிடம் பொலிஸாரால் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அங்கு மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் தடய பொருட்கள் அனைத்தும் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.