கூட்டுறவு முறையை விருத்தி செய்து நாடு முழுவதும் நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க கணக்குகள் குழுவின் (கோபா) தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயற்பாடுகளை மதிப்பாய்வு செய்வதற்கு அரசாங்க கணக்குகள் குழு பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.
கடந்த காலங்களில் கூட்டுறவு முறைமை இந்நாட்டில் மிகவும் செயற்திறனாக செயற்பட்டதாக சுட்டிக்காட்டிய பேராசிரியர் இன்று அந்த நிலைமை இல்லாமல் போயுள்ளதாக குறிப்பிட்டார்.
விசேடமாக விவசாய கூட்டுறவு மற்றும் நுகர்வோர் கூட்டுறவுக்கிடையிலான தொடர்பை அதிகரித்து ஒரு சில உற்பத்திகளை நேரடியாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று, பருப்பு, சீனி, அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை முறையான வேலைத் திட்டமொன்றின் மூலம் நியாயமான விலைக்கு வழங்க முடியும் என தான் நம்புவதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
அதேபோன்று, அவுஸ்திரேலியாவிலிருந்து சிவப்பு பருப்பு மற்றும் இந்தியாவிலிருந்து சீனி இறக்குமதி செய்வதற்கு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால்,கூட்டுறவு மூலம் அவசரமாக சலுகை விலையில் சீனி மற்றும் பருப்பு என்பவற்றை வழங்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.