July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்னர் பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்திக்க இலங்கை அரசாங்கம் தீர்மானம்

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் காரணிகளை ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்னர் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தயாராகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு,கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவர்களின் சொந்த காணிகளை மீள வழங்குவது உள்ளிட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் முடிந்தளவு முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், இவை தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவர்களின் சொந்த காணிகளை மீள வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்தளவு முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், இவை தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கும் அபிவிருத்தி செயற்பாடுகள்,காணி விடுவிப்புகள் மற்றும் இது தொடர்பில் கடந்த ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதென அமைச்சர் தினேஷ் குணவர்தன கூட்டத்தில் தெரிவித்தார்.

அத்துடன் உயர் நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் ஊடாக சாட்சிகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.இதன் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் அவசியமான காரணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், இதே காரணிகளை ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்னர் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாவும் அமைச்சர் குணவர்தன குறிப்பிட்டார்.