ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களை சிவில் உடையில் பொலிஸார் கைது செய்வதும், வெள்ளைவேனில் கடத்தி செல்வதும் இந்த நாட்டில் காட்டு சட்டமொன்று உள்ளதென்பதை அரசாங்கம் வெளிப்படுத்துவதாகவும்,இவ்வாறான மோசமான கலாசாரத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் வீடுகளுக்கு செல்லும்போது பல்வேறு பொலிஸ் நிலையங்களில் கைது செய்யப்படுகின்றனர்.அவ்வாறு கைது செய்யப்படுபவர்களை ஏன் துறைமுகத்திற்குள் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர்.வேண்டுமென்றே ஆசிரியர்களை கைது செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு வீட்டிற்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பலரை பொலிஸார் சிவில் உடையில் சென்று கைது செய்துள்ளனர்.சிலர் வெள்ளை வானில் சென்று கைது செய்யப்பட்டுள்ளனர்.இது கைதுகள் அல்ல கடத்தலாகும்.இந்த முறையை பின்பற்றி நாளை யாரேனும் பாதாளக் குழுவை சேர்ந்தோர் இவ்வாறு வந்து வீதியில் செல்வோரை தூக்கிச் செல்ல நடவடிக்கையெடுத்தால் என்ன செய்வது.
நீங்கள் இன்று அதிகாரபூர்வமான அரசாங்கம் போன்று செயற்படாது காட்டு பொலிஸார் போன்று செயற்பட்டு வருகின்றீர்கள்.காட்டு சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த நினைக்கின்றீர்கள். அதை கைவிட்டு முறையாக செயற்பட வேண்டும். இந்த கலாசாரத்தை உருவாக்க வேண்டாம்.சபாநாயகர் கூட இதற்கு இணங்க மாட்டார் என்றே நினைகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.