ஆசிரியர் சங்கத்தின் நியாயமான போராட்டங்களை அடாவடித்தனத்தினூடாக அடக்குவதன் மூலமாகவும்,அடையாளம் தெரியாத பொலிஸாரால் கைதுகள் இடம்பெறுவதன் மூலமாகவும் அரசாங்கத்தின் முன்னைய வெள்ளைவேன் கலாசாரத்தை மீண்டும் நினைவுபடுத்த முயற்சிக்கின்றனர்.உரிமைக்கான மக்களின் போராட்டங்களை முன்னெடுத்தால் வெள்ளைவேன் வரும் என்பதை அரசாங்கம் கூற முயற்சிக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொலிசார் செய்வதை போன்று நாளை வேறு எவரும் இவ்வாறான கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடலாம்.கப்பம் கேட்பதற்கான பாதாள குழுக்கள் இதே முறைமையை கையாளலாம்.உங்களுக்கு இதனை கூறவேண்டிய அவசியம் இல்லை.11 மாணவர் கடத்தல் விவகாரங்கள் என்பன உங்களுக்கு நன்றாக தெரியும்.அதே விதமாக, சந்தேகத்திற்கு இடமான நபர்கள் என கருதுபவர்களை வெள்ளை வேனில் கடத்தும் கலாசாரத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கட்டளைக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒருபுறம் நாடு கொவிட் நிலைமைகளில் பாதிக்கப்பட்டுள்ளது, இலங்கை கறுப்புப் பட்டியலில் போடப்பட்டுள்ளது, நாட்டில் டெல்டா அச்சுறுத்தல் நிலை உள்ளது, மறுபக்கம் இதனை சாதகமாக வைத்துக் கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள்.நாட்டில் சட்டம் ஒழுங்கு நாசமாக்கப்பட்டு வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.