புதிய சுகாதார வழிகாட்டுதலின் கீழ் அரச துறை ஊழியர்களை திரும்ப பணிக்கு அழைப்பது தொடர்பான திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறியின் கையொப்பத்துடன் குறித்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண் அதிகாரிகள் வேலைக்கு அழைக்கப்பட மாட்டார்கள் என சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள் வீட்டிலிருந்து இணையத்தின் மூலம் பணியை முன்னெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு அரசாங்க ஊழியரும் வாரத்திற்கு குறைந்தது மூன்று நாட்களாவது அலுவலகத்திற்கு சமூகம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்கு அழைக்கப்படாத நாட்களில் ஊழியர்கள் இணையத்தின் ஊடாக வேலை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தோடு பணிக்கு அழைக்கப்படும் ஊழியர்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், கைகளைக் கழுவவும், முகக்கவசம் அணியவும், தங்கள் பணியிடத்தை சுத்தமாக வைத்திருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார வழிகாட்டல்களின் கீழ் ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் வழமை போன்று அனைத்து அரச ஊழியர்களும் கடமைக்கு சமுகமளிக்க வேண்டும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
எனினும், நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நிலையை கருத்தில் கொண்டு புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.