கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் ஆசிரியர், அதிபர்கள் போராட்டங்களை மேற்கொள்வதை கைவிடுமாறு தேசிய தேர்தல் ஆணையகத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் வலைத்தளத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
ஆசிரியர்களின் போராட்டத்துக்கு வாழ்த்துக்கள். ஆசிரியர்கள், அதிபர்கள், தொழிற்சங்க தலைவர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்கள் இதை கவனமாகக் கேளுங்கள்.
உங்கள் நியாயமான கோரிக்கைகளை வெல்லும் உத்திகள் அல்லது முறைகளை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள். தற்போது வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக போராட்டங்களை முன்னெடுப்பது மிகவும் ஆபத்தானது.
ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்கி, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வலியுறுத்தியும் கொத்தலாவல சட்டமூலத்தை நீக்க கோரியும் இணையவழி கற்பித்தல் முறைமையில் இருந்து விலகி ஆசிரியர், அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று 25 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
எவ்வாறாயினும் தமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் தீர்வு வழங்கப்படாமையினால் இது குறித்து தீர்மானிப்பதற்காக, சகல தனியார் மற்றும் அரச தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.