July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: ஹேமசிறி, பூஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தினால், தமது பொறுப்பை அலட்சியம் செய்து அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குறித்த இரண்டு பேருக்கும் எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.

இந்த குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்வதற்காகவென இம்மாதம் 27ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 300 ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் தெரிந்து அதனை தடுக்கத் தவறியதாக குறிப்பிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று வழக்குத் தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த வழக்கு நேற்று நாமல் பலல்லே, ஆதித்ய படபெதிகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இவ்வேளையில் குற்றம் சாட்டப்பட்ட ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித ஜயசுந்தரவை பிணையில் விடுவிக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த இருவரினதும் கைவிரல் அடையாளத்தைப் பெற்று அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டனர்.

இதனிடையே, இந்த வழக்கு விசாரணையில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மீண்டும் மறுபரிசீலனை செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்குமாறு கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழாம், எதிர்வரும் 27ஆம் தேதி குறித்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும், அன்றைய தினம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.