அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கியதால் யாழ்ப்பாணம், தொண்டமானாறு செல்வச் சந்திநிதி ஆலயத்தின் சந்திநிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் இவ்வாறு இன்று பிற்பகல் அறிவித்தல் ஒட்டப்பட்டு மூடப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்திநிதி ஆலய வருடாந்த திருவிழா நாளை மறுதினம் ஆரம்பமாக உள்ள நிலையில், சுகாதாரக் கட்டுப்பாடுகளின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் திருவிழா நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று நண்பகலுக்குப் பின் சந்திநியான் ஆச்சிரமத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதன்போது கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோரை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து அன்னதானம் வழங்கியதால் பொதுச் சுகாதார பரிசோதகரினால் அந்த ஆச்சிரமம் மூடப்பட்டது.
இதேவேளை, ஆலய சூழலில் அமைந்துள்ள கடைகளில் உள்ளோர் பிசிஆர் பரிசோதனை எடுக்கும் வரை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.