September 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடு பூராகவும் கொவிட் பரவலுக்கான காரணத்தை ஜனாதிபதிக்கு விளக்கிய புலனாய்வுத் துறை!

இலங்கை முழுவதும் கடந்த மாதத்தில் 120 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுத் துறையினர் கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களின்போது குறைந்தது 1,500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்ததாக புலனாய்வுத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றாது இவ்வாறு பொது மக்கள் ஒன்றுகூடுவதே நாடு பூராகவும் வேகமாக கொவிட் தொற்று பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தக் கூட்டத்தில் தடுப்பூசி திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது மூன்றாவது தடுப்பூசியை வழங்க வேண்டி ஏற்பட்டால் அதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நோய்த் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காகப் பொதுமக்கள் வழங்குகின்ற பங்களிப்பு குறைந்துள்ளமை கவலைக்குறியதாக உள்ளதென அவர் மேலும் கூறியுள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும், செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கக்கூடிய அளவுக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன எனவும் வைத்திய நிபுணர் இதன்போது ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.