November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு உள்ளாக இடமளிக்க வேண்டாம்”: ஜனாதிபதி பணிப்புரை

கொவிட் நோய்த் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு வருகின்ற எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு உள்ளாவதற்கு இடமளிக்க வேண்டாமென, சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணியின் கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் பொதுமக்கள் சங்கடத்துக்கு ஆளாவதைத் தடுப்பதற்கான பொறிமுறை ஒன்றைத் திட்டமிடுவதற்கு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் நேரடியாகப் பங்களிப்புச் செய்யவேண்டும் என்று இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் நோய்த் தொற்று அறிகுறிகள் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட சில பிரதான  வைத்தியாசாலைகளுக்கு நாளாந்தம் வருகை தருகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்நிலையில் எந்தவோர் அவசர நிலையிலும் தொற்றாளர்கள் சங்கடத்துக்கு ஆளாவதைத் தடுப்பதற்காக சில பிரதான நகரங்களுக்கு அண்மையில், மேலதிக சிகிச்சை நிலையங்கள் பல கடந்த மாதங்களுக்கு முன்னரே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, நோய்த் தொற்று அறிகுறிகள் காணப்படுகின்றவர்கள், முதலாவதாக மேலதிக சிகிச்சை நிலையங்களுக்கும் பின்னர் நோயாளியின் நிலைமையை அவதானித்து வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பதன் அவசியத்தையும், ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளார்.