July 1, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் முடக்க நிலையை அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கையின் மேல் மாகாணத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் முடக்க நிலையை அறிவிக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவிடம், இலங்கை மருத்துவ சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மருத்துவ சபை ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்‌ஷவுக்கு கடிதமொன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் காணப்படுகின்ற தீவிர சிகிச்சை பிரிவுகளும், சாதாரண வார்ட்களும் கொரோனா நோயாளர்களால் நிரம்பி இருப்பதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க பொருத்தமான மருத்துவ வசதிகள் பற்றாக்குறை இருப்பதாகவும் இலங்கை மருத்துவ சபை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு டெல்டா வகை வைரஸ் தான் காரணம் என்று இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், தற்போது மேல் மாகாணத்தில் வேகமாக பரவிவரும் டெல்டா வகை வைரஸ் மிகக் குறுகிய காலத்தில் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுக் ஒன்றுகூடல்களை குறைத்தல், முறையான முகக்கவசம் அணிதல், கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்தல் மற்றும் சமூக இடைவெளி இருந்து விலகி இருப்பதன் மூலம் மட்டுமே இந்த வைரஸ் பரவுவதை குறைக்க முடியும் என்று இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

அதேபோல் தற்போதைய கொரோனா பரவலுக்கு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாட்டை தளர்த்தியமை,  சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு இடங்களைத் திறத்தல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், வழிபாட்டுத் தலங்களைத் திறத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தான் முக்கிய காரணம் என இலங்கை மருத்துவ சபை கூறியுள்ளது.

இதனிடையே, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்ற சுகாதார தரப்பினர்களும் எதிர்காலத்தில் கொரெனா தொற்றினால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளார்கள் என்று அந்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டுகிறது,

எனவே, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இலங்கை மருத்துவ சபை அந்தக் கடிதத்தின் மூலம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டது.