July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுலாகுமா?: இன்று முக்கிய கலந்துரையாடல்!

இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் நிலைமை தீவிரமடையும் நிலையில், இது குறித்து இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள கொவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்போது பயணக் கட்டுப்பாட்டை விதிக்குமாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, தினசரி இறப்புகளின் எண்ணிக்கையும் உயர்வடைந்து வருகின்ற நிலையில், வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் தற்போது டெல்டா தொற்றுப் பரவலே காணப்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்த வேண்டுமாயின் பயணக்கட்டுப்பாட்டை கடுமையாக அமுல்படுத்துவது அவசியமாகும் என்றும் விசேட மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினரால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இதுவரையில் மீண்டும் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை என்று கொவிட் தடுப்பு செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் இன்றைய தினம் நடைபெறவுள்ள கொவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராய்ந்து முக்கியத் தீர்மானங்கள் சில எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.