July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் கடலட்டை பண்ணை உற்பத்தி என்பன வடக்கு மக்களை பாதித்துள்ளது’

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடு காரணமாக வடக்கு மீனவர்களுக்கு மிகப்பெரிய சொத்தழிப்பு ஏற்பட்டுள்ளது. மறுபுறம் கடலட்டை பண்ணைகளை உருவாக்கி எமது கடல் வளங்களை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது என பாராளுமன்றத்தில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அதேபோல்,வடக்கு,கிழக்கின் மீனவர்கள் இன்று பாரிய நெருக்கடி நிலையொன்றை எதிர்கொள்ளும் நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக எமது மீனவர்களின் சொத்துக்கள் அழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதியில் இருந்து சில தினங்களாகவே இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் நுழைந்து எமது மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியுள்ளனர்.மன்னார்,முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண கடல் பரப்பில் இவ்வாறான அழிவுகள் இடம்பெற்றுள்ளன.27 மீனவர்களின் சொத்துக்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.மொத்தமாக 277 மீன் வலைகளும் அழிக்கப்பட்டுள்ளன.

இதனால் மொத்தமாக நான்கு மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் நாசமாகியுள்ளது.இந்திய மீனவர்களின் ஏனைய அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்தமாக 15 மில்லியன் ரூபா பெறுமதியான மீனவர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் கடலோர நிலங்களை ஆக்கிரமித்துள்ளீர்கள்,மறுபுறம் கடற்படை வடக்கு கடல் எல்லையில் பாதுகாப்பு ரோந்துகளில் ஈடுபடுகின்றது.கடலோரங்களில் பல கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவ்வாறு இருந்தும் வெளிநாட்டு மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வடக்கு,கிழக்கில் எமது மீனவர்களின் சொத்துக்களை அழித்துள்ளது.ஆனால் கடற்படை இவற்றை கவனிக்காது உறங்குகின்றதா? அரசாங்கம் வேண்டுமென்றே இவற்றை அனுமதித்து வேடிக்கை பார்க்கின்றதா? என்ற கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

அதேபோல், வடக்கில் பல்வேறு பகுதிகளில் கடல் அட்டை பண்ணைகளை உருவாக்க அரசாங்கம் இடமளித்து வருகின்றது. இதனால் எமது கடற்படுக்கைகள் நாசமாக்கப்பட்டு வருகின்றது. ஒருபுறம் வெளிநாட்டு மீனவர்களை தடுக்க முடியாது எமது மீனவர்கள் பாதிக்கப்படுவதுடன், மறுபுறம் அபிவிருத்தி என்ற பெயரில் கடல் அட்டை பண்ணைகளை உருவாக்க அனுமதித்து வடக்கில் எமது மக்களை அகற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதா என கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

எனவே எமது மக்களுக்கு வாழ்வாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.