January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் செயலணியை நம்பினால் மக்கள் உயிரிழப்பதை தடுக்க முடியாது என்கிறார் ரணில்

நாட்டின் கொவிட் நிலைமைகளை கட்டுப்படுத்துவதிலும்,மக்களின் உயிரை காப்பாற்றுவதிலும் அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர,இதற்காக மாதக்கணக்கில் காலத்தை கடத்த வேண்டாம்.உடனடியாக கொவிட் அவசரகால நிதியமொன்றை உருவாக்க முடியுமென்றால் அது ஆரோக்கியமானதாக அமையும் என்று பாராளுமன்றத்தில் கூறிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கொவிட் செயலணிக் கூட்டத்தில் தீர்மானம் எடுத்து கொவிட் நிலைமைகளை கட்டுப்படுத்த முன்னர் மக்கள் பலர் உயிரிழக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.

உலகில் சகல பகுதிகளிலும் டெல்டா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டுள்ளது.ஐரோப்பாவில் சகல பகுதிகளிலும் இந்த வைரஸ் தொற்று பரவல் காணப்படுகின்றது.எமக்கும் இங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியாக வேண்டும்.குறிப்பாக இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ஆய்வுகளுக்கு அமைய அஸ்ட்ரா செனகா தடுப்பூசி மூலமாக 60-66 வீதமானோரையே பாதுகாக்க முடியுமென கூறப்படுகின்றது.

பைசர் அதனை விடவும் குறைவாம்.இப்போதும் தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றது.தென்னாபிரிக்காவில் பரவும் வைரஸ் தொற்று இங்கு பரவாத வகையில் கட்டுப்படுத்தியேயாக வேண்டும். இப்போதும் எமது நாட்டில் பரவும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

சுகாதார பிரதி பணிப்பாளர் கூறிய விடயங்களுக்கு நாமும் இணக்கம் தெரிவிக்க வேண்டும்.ஏனென்றால் கொவிட் நிலைமைகளை செயலணி மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதென்றால் மக்கள் உயிரிழப்பார்கள்.இந்த விவகாரத்தில் அமைச்சரவை பொறுப்பை எடுத்துக்கொண்டு விசேட குழுவொன்றை நியமித்து நிலைமைகளை கையாளவேண்டும்.நாம் அதற்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குகின்றோம்.

இந்த நெருக்கடி நாட்டின் தேசிய நெருக்கடியே தவிர, அரசியல் பிரச்சினை அல்ல.இதனை அரசியலாக்க நாம் நினைக்கவும் இல்லை. என்ன செய்தேனும் மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும்.அதனை முன்னெடுக்க எமது ஒத்துழைப்புகள் எப்போதும் இருக்கும். அதேபோல் அவசர கொவிட் நிதியமொன்றை உருவாக்க முடியுமென்றால் அது ஆரோக்கியமானதாக அமையும்.எவ்வாறு கையாண்டாலும் இறுதியாக அரச நிதிக்குழுவில் தான் கையாள வேண்டியுள்ளது.எனவே அவற்றை யோசிக்காது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.