கொவிட்-19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக 18 வயதிற்கு குறைவான 45 ஆயிரத்து 831 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 14 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
18 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றுவது குறித்து ஆராயப்படுவதாகவும்,எனினும் இன்னமும் இறுதித் தீர்மானமொன்று எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
ஒட்சிசன் தேவை குறித்து நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.தற்போது வரையிலான தரவுகளுக்கு அமைய 2021 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கு அமைய நாளொன்றுக்கு 44 டொன் ஒட்சிசன் தேவைப்படுவதாக கூறப்படுகின்றது.இதனை பெற்றுக் கொள்ள பதிவு செய்யப்பட்ட இரண்டு நிறுவனங்களின் மூலமாக நாளொன்றுக்கு 77 டொன் ஒட்சிசன் உற்பத்தி செய்வதுடன், அவற்றில் வைத்திய சேவைகளுக்காக 44 டொன் ஒட்சிசனும் ஏனையவை தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் புதிதாக 14 ஒட்சிசன் உற்பத்தி நிலையங்களை உருவாக்கவும்,அதனுடன் கூடிய ஏனைய செயற்பாடுகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.எனவே நாட்டில் ஒட்சிசன் தட்டுப்பாடு இல்லை.
கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.தற்போது வரையில் 10 வயதிற்கு குறைந்த கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 19 ஆயிரத்து 688 ஆகும்.அதேபோல் 10-18 வயதிற்கு உட்பட்ட 24 ஆயிரத்து 143 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதேபோல்,18 வயதிற்கு குறைந்த சிறுவர்களில் 14 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே சிறுவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பைசர் தடுப்பூசியை ஏற்றுவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. எவ்வாறு இருப்பினும் இப்போது வரையில் எந்த தடுப்பூசி ஏற்றுவது என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்பதுடன் சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் சிறப்பு செயலணியின் மூலமாக இதற்கான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.