அப்பாவி சிறுமிக்கு அநியாயம் நேர்ந்துள்ளது,இந்த விடயத்தில் சட்டத்தை சரியாக கையாண்டு குற்றவாளியை தண்டிப்போம்.இதில் ரிஷாத் பதியுதீன் எதனையும் கூற வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் நீதிமன்ற விசாரணைகளை, மரண பரிசோதனைகளை பாராளுமன்ற வரப்பிரசாதத்திற்குள் ஒளிந்து கொண்டு மூடி மறைக்க முயற்சிக்க வேண்டாம் என ஆளுங்கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ரிஷாத் பதியுதீன் உரையாற்றி ஹிசாலினி விடயத்தில் நடந்தது என்னவென தனது பக்க கருத்துக்களை முன்வைத்த வேளையில்,அதற்கு பதிலளித்து பேசும்போதே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.
ரிஷாத் பதியுதீனின் உரையை முழுமையாக கேட்டுக் கொண்டிருந்தேன்.அவர் பாராளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தி தற்போது நடக்கும் விசாரணைகளை பற்றி பேசுகின்றார். ஆனால், நீதிமன்றத்தில் முன்னெடுக்கும் வழக்கு விடயங்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும்.எனவே அவர் நீதிமன்ற விடயங்கள் குறித்து பேசிய காரணிகளை ஹன்சார்டில் இருந்து நீக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.அதுமட்டுமல்ல, ஜனாதிபதியோ அரசாங்கமோ அவரை தனிப்பட்ட முறையில் பழிவாங்க நினைக்கவில்லை.சிறுமியின் மரணத்தின் பின்னர் எழுந்த சர்ச்சைகளில் அரசாங்கம் சரியாக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற பிரச்சினையே எழுந்தது.எனவே எந்தவொரு அரசியல்வாதியையும் பழிவாங்க அரசாங்கம் நினைக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.