
தேசிய கொள்கைகள், சர்வதேச நியமங்களுக்கு அமைய அநாதைகள், கைவிடப்பட்ட மற்றும் அநாதரவான சிறுவர்களையும் சட்ட ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள சிறுவர்களையும் விசேடமாக கொண்டு சகல சிறுவர்களினது உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் செயற்பணியாக இருந்தாலும் சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான தேசிய கொள்கையை தயாரித்தல் மற்றும் அது தொடர்பான சட்டங்களை உருவாக்குதல் 2021 ஆம் ஆண்டு வரை இடம்பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் இடம்பெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் புலப்பட்டது.
சிறுவர்கள் தொடர்பில் செய்தி ஊடகங்களில் அறிக்கையிடும் போது, அது தொடர்பில் முறையான சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என குழு, அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன், உளவியல் அழுத்தங்களுக்கு உள்ளான சிறுவர்களுக்கு ஆலோசனை சேவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் நோக்கில் சிறுவர் ஆலோசனை சேவை தொடர்பில் முறையான வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இந்த விடயங்களை கருத்தில் கொண்டு பொருத்தமான தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்படவேண்டும் எனவும் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான செயற்பாடுகள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை அரசாங்க கணக்குகள் குழு முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட போதே இந்த விடயங்கள் புலப்பட்டது.நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துக்கு மேற்கொள்ளப்பட்ட 485 முறைப்பாடுகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமை, சிறுவர்களின் முறைப்பாடுகள் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்வுகளின் முன்னேற்றங்கள் குறித்து திணைக்களம் விசாரணைகளை நடத்தாமை தொடர்பிலும் இதன்போது குழு உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர்.