July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தேசியப் பட்டியலிலாவது அரைப்பங்கு பெண்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும்’; பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரை

தேசியப் பட்டியலிலாவது அரைப்பங்கு பெண்களுக்காக ஒதுக்கப்பட வேண்டுமென பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் முன்மொழிந்துள்ளது.

இந்த ஒன்றியம் சார்பில் விசேட குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைத்த அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே,பாராளுமன்ற, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 30 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

அரசாங்க சபைகள் மற்றும் ஆணைக்குழுக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 33 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் இந்த விசேட குழுவில் யோசனை முன்வைக்கப்பட்டது. சகல தேர்தல்களுக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் இராஜாங்க அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழ்நிலையில் பெண்களுக்கு வேட்பு மனுக்களைப் பெற்றுக் கொள்வது சிக்கலானதாகவே உள்ளது.பெண்கள் தொடர்பில் சமூகத்தின் நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும்.தற்பொழுது கடைப்பிடிக்கப்படும் விகிதாசார தேர்தல் முறையானது பெண்களுக்கு அந்தளவு சாதகமானதாக இல்லையென்றும் தெரிவித்தார்.

நாட்டுக்குள் தேர்தல் வன்முறைகள் இடம்பெறுவதும் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகளில் பெண்கள் உயர் பதவிகள் வழங்கப்படாமை குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது.உள்ளூராட்சி மன்ற முறைமை போன்று, இதற்கு முன்னர் முன்மொழியப்பட்ட மாகாண சபைத் தேர்தல் முறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கு அதிக இடம் வழங்கப்பட்டிருந்ததாக விசேட குழுவின் தலைவரும் சபை முதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

நாட்டில் தற்பொழுது நடைமுறையில் உள்ள விருப்பு வாக்கு முறையை இரத்துச் செய்யாமல் பெண்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்புகளை வழங்க முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா இங்கு சுட்டிக்காட்டினார்.தேசியப் பட்டியலின் ஊடாக உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறை குறித்து ஆழமாக ஆராயவேண்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.