November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அறிகுறிகள் அற்ற கொவிட் தொற்றாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்த திட்டம்!

நோய் அறிகுறிகள் அற்ற கொவிட் தொற்றாளர்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கும் வேலைத் திட்டம் (09) திங்கட் கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படாத தொற்றாளர்கள் வைத்தியர்கன் கண்காணிப்பின் கீழ் இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறினார்.

இதனிடையே நாட்டில் கொரோனா நோயாளர்களின் அதிகரிப்போடு நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் குறையும் அபாயம் தோன்றியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனை, களுபோவிலவில் உள்ள கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனைகளும் இந்த நெருக்கடியை எதிர் கொண்டுள்ளன.

இதேவேளை, கராப்பிட்டிய போதனா மருத்துவமனை மற்றும் இரத்தினபுரி போதனா மருத்துவமனைகள் தங்கள் வளாகத்திற்குள் ‘அவசரகால நிலையை’ அறிவித்துள்ளன.

இந்த பின்னணியில், மருத்துவ நிபுணர்களின் சங்கம் நாட்டில் “டெல்டா” மாறுபாடு வேகமாக பரவுவது குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

ஒக்ஸிஜன் தேவையுடைய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மருத்துவ நிபுணர்களின் சங்கத்தினர், கொவிட் -19 கட்டுப்பாட்டு தளர்வுகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.