July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கால்பந்து சம்மேளனத்தில் இடம்பெற்றுள்ள நிதி மோசடிகள் தொடர்பில் கோப் குழு விசேட கவனம்

கால்பந்து சம்மேளனத்தில் இறுதியாக இடம்பெற்ற தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் குழுவின் தலைவருக்கு 750,000 ரூபா நிதியை வழங்குவதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற அரசங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அதுமாத்திரமின்றி, குறித்த தேர்தலை நடத்துவதற்காக ஏனைய உறுப்பினர்களுக்கு தலா 600,000 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நிதி வழங்கப்பட்டமை தொடர்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி கோப் குழுவில் எந்தவொரு அதிகாரியும் குறிப்பிடவில்லை எனவும், இந்நிலையில் ஏப்ரல் 20 ஆம் திகதி இந்நிதி வழங்கப்பட்டதாக தற்பொழுது கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயம் என்றும் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஆராய்வதுடன், இதற்காக தற்பொழுது பின்பற்றப்படும் நடைமுறையை ஒழுங்குபடுத்துமாறும் கோப் குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்றை மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு விளையாட்டு அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோனுக்கு கோப் குழு அறிவித்தது.

இதனிடையே, களுத்துறை கால்பந்தாட்ட மைதானத்தை நிர்மாணிப்பது தொடர்பில் இத்தாலி கால்பந்தாட்ட வீரர்களின் சங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 40,400 யூரோ (6,287,670 ரூபா) நிதி, ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் போட்டி நடத்துவதற்காக வழங்கப்பட்ட 60,000 டொலர் (6,415,290 ரூபா) நிதி, தனியார் நிறுவனம் ஒன்றினால் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி, ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 200,000 டொலர் நிதி என்பன கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மணிலால் பெர்னாந்துவினால் முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பில் கோப் குழுவினால் கவனம் செலுத்தப்பட்டது.