July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய துணைத் தூதரகம் முன்பாக போராட்டம் நடத்த யாழ். மீனவ சமாசங்கள் தீர்மானம்!

இந்திய மீனவர்களால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்கள், இது தொடர்பில் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

யாழ்ப்பாணத்திலுள்ள ஊடக அமையத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்களது அத்துமீறிய, எல்லை தாண்டிய, சட்டவிரோத டோலர் இழுவைமீன்பிடி முறையால் எமது சொத்துக்கள் நாளாந்தம் அபகரிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தடுத்து நிறுத்தி எமது தொழில் நடவடிக்கைகளுக்க பாதுகாப்பை உறுதிசெய்து தாருமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அது தொடர்பான நடவடிக்கைகளை அவர்கள் துறைசார் தரப்பினருடன் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தீவகம் மற்றும் தாளையடி பகுதிகளுக்கள் ஊடுருவிய இந்திய மீனவர்கள் எமது கடற்றொழிலாளர்களது பல கோடி பெறுமதியான வலைகளை அறுத்து நாசமாக்கிச் சென்றுள்ளனர் என்றும், இவ்வாறான செயற்பாட்டை இந்நதிய மீனவர்கள் நிறுத்த வேண்டும் எனவும் அந்த சமாசங்களின் பிரதிநிதிகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வலியுறுத்தினர்.

இந்த விடயம் குறித்து இலங்கை அரசு இந்திய அரசிடம் பேசி நிரந்தர தீர்வை காணவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இந்திய மீனவர்கள் தமது சட்டவிரோத செயற்பாடுகளை மறைப்பதற்கு மீண்டும் இலங்கை கடற்படையினர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பிரச்சினையை திசைதிருப்ப முயற்சிக்கப்படுவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் இந்திய மீனவர்களின் டோலர்களால் எமது கடற்றொழிலாளர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் அழிக்கப்டவிருந்த நிலையில் இலங்கை கடற்படையினர் உடனடியாக அவ்விடத்திற்கு வந்து எமது கடற்றொழிலாளர்களை பாதுகாத்திருந்தனர் எனவும், இதற்காக கடற்படையினருக்கு சமாசங்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணை தூதரகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.