ஹிஷாலினி 16 வயது பூர்த்தியடைந்த பின்னர் ஒரு தரகர் மூலமாக தனது வீட்டிற்கு பணிக்கு வந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஹிஷாலியின் மரணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, ரிஷாட் பதியுதீன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது சகோதரி புற்றுநோயால் மரணித்த போது ஏற்பட்ட துன்பத்தைப் போன்ற ஒரு நிலையை ஹிஷாலினியின் மரணமும் தமது குடும்பத்துக்கு ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண தனிநபர் வாழ்வதற்குப் போதுமான அறையும் ஒழுங்கான சூழலும் ஹிஷாலினிக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது மனைவியின் தந்தை 71 வயதான ஷிஹாப்தீன் மற்றும் மனைவியின் தாய் ஆகியோர் ஹிஷினிலியைக் காப்பாற்ற பெரிதும் முயற்சி எடுத்துள்ளதாக ரிஷாட் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஷாலினி காலை 7:33 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பதிவுகள் இருக்கும் நிலையில், 8:35 மணிக்கு அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹிஷாலினி உயிர் பிழைக்க வேண்டும் என்று தனது மனைவி, குழந்தைகள் நோன்பு நோற்று பிரார்த்தித்ததாகவும் ரிஷாட் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஷாலினி வேலைக்கு வரும் போது தான் போலி வழக்கு ஒன்றில் சிறை பிடிக்கப்பட்டு இருந்ததாகவும், ஹிஷாலினி மரணிக்கும் போதும் தான் தடுப்புக் காவலில் இருந்ததாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஹிஷாலினி மருத்துவமனையில் இருக்கும் போது ஊடகங்களுக்கு சரியான தகவல்களை வெளியிட்ட தாயாரை, மரணத்தின் பின்னர் அரசியல் வங்குரோத்துள்ள சிலர் பிழையாக வழிநடத்துவதாகவும் ரிஷாட் விளக்கமளித்துள்ளார்.
ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக சுயாதீனமான விசாரணை நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.