
இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் மூன்று பேர் கொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற பரிதாபகரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் உப தலைவர் விசேட மருத்துவ நிபுணர் மனில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் கடந்த காலத்தில் நாளாந்தம் 20 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட போதிலும் 2000 தொடக்கம் 3000 வரையிலான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
எனினும், இன்று வெறும் 10 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனையே நடத்தப்படும் போதிலும் 2 ஆயிரம் தொற்றாளர்கள் வரை அடையாளம் காணப்படுகின்றனர்.
அதுமாத்திரமன்றி, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை பாருங்கள். ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் சுமார் மூன்று பேர் மரணிக்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பதிவான மரணங்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது இந்த நிலைமையை நன்கு அவதானிக்க முடியும்.
கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசிக்கு இடையேயான போட்டியில் எமக்கு வெற்றி கிடைக்க வேண்டுமானால் இன்னும் குறுகிய காலம் பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே சிறந்த பதில்.அல்லது தனித்தனியாக சுய பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது நல்லது என அவர் தெரிவித்தார்.