July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“கொழும்பில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 73 வீதமானோர் தடுப்பூசி போடாதவர்கள்”; ரோஸி சேனாநாயக்க

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற 73 வீதமானோர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் அல்ல என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களில் 50 சதவீதமானோர் 29 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்பிடையில் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 73 வீதமானோர் தடுப்பூசி போடப்படாதவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இதில் ஏறக்குறைய 22 வீதமானோர் ஒரு டோஸ் தடுப்பூசியை மட்டுமே போட்டுக் கொண்டுள்ளார்கள். அத்துடன், சினோபார்ம் அல்லது கொவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிளும் 5  வீதமானோருக்கு மட்டுமே போடப்படுகிறது.

இதனிடையே, குறித்த பரிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 50 வீதமானோர் 29 வயது மற்றும் அதற்கு குறைவானவர்கள்.

எனவே, கொழும்பு மாவட்டத்திலும் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும்.

இந்த நிலையில், கொழும்பில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதுடன், தற்போது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் ஒரு சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களில் 92 வீதமானோருக்கு அஸ்ட்ரா செனிகா அல்லது சினோபார்ம் தடுப்பூசிகளில் ஒரு டோஸ் கூட கிடைக்கவில்லை. சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து, கொழும்பு மாநகர சபையினால் 30 வயதுக்கு மேற்பட்ட மற்றும் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களை உள்ளடக்கியவாறு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டமொன்றை கட்டாயமாக முன்னெடுத்து வருகின்றது.

எனவே, உங்களது பெறுமதியான உயிர்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்கு இந்த பொன்னான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 88 வீதமானோருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.அத்துடன், 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 75  வீதமானோருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.