July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா- ‘கடந்த 10 நாட்களில் 591 மரணம்; 21,344 புதிய தொற்றாளர்கள்’

இலங்கையில் கடந்த 10 நாட்களில் 21,344 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 591 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொவிட் நிலவரம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடந்த 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு சுகாதார அமைச்சர் இன்று பதிலளிக்கும் போதே, இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதற்கு முன்னரான வாரங்களில் நாளாந்தம் 1000- 1500 வரையிலான கொரோனா தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டதாகவும், தற்போது அந்த எண்ணிக்கை 2000- 2500 வரை உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காலப் பகுதியில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 79 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி கொரோனா அலைகள் உருவாகின்றதாகவும், இந்த நோய் நிலை அடிக்கடி மாறுவதால் கொரோனா அலை ஏற்படுவது குறித்து சரியாக குறிப்பிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் சனத் தொகையில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் 86 வீதமானோருக்கு ஏதேனும் ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 18 வீதமானோருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தற்போது 164 நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 45,831 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியதாகவும், அவர்களில் 14 சிறுவர்கள் உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.