July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இரண்டு நாட்களுக்கும் மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியரை நாடவும்”

Photo: dengue.health.gov.lk

இரண்டு நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் தொடருமாக இருந்தால் உடனடியாக வைத்தியரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது இலங்கையில் டெங்கு வைரஸ் தீவிரமடையும் அபாயம் இருப்பதாகவும் இதனால் இது குறித்து மக்கள் அவதானத்துடன் நடந்துகொள்வது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு உயிர்கொல்லி நோய் என்பதனால் அந்தக் காய்ச்சாலால் பீடிக்கப்படுவோர் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், இதனால் காய்ச்சல் இருக்குமாக இருந்தால் தாமதிக்காது வைத்தியரை நாடுவது சிறந்தது என்று வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மே மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், ஆகவே இந்தக் காலப்பகுதியில் அந்த நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.