January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வடக்கில் படையினர் விவசாயம் செய்வது உண்மையே’: அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ

Photo: Army.lk

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே என்று அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சிவில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

”சிவில் பாதுகாப்பு படையணியானது கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை பேணி வருகின்றது. மொத்தமாக 47 பண்ணைகள் இவ்வாறு பராமரிக்கப்பட்டு வருகின்றது இவற்றில் பலர் பணியாற்றுகின்றனர்.” என்று அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

இவற்றில் மன்னார் மாவட்டத்தில் வெள்ளம் குளம் பிரதேசத்தில் உள்ள நூறு ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் விவசாய பண்ணைகளை நடத்தி வருகின்றது எனக் கூறிய அமைச்சர், புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமெனவும் தெரிவித்துள்ளார்.