September 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சபாபீடத்தில் நான் சிரிக்கவில்லை; சபையில் விளக்கமளித்த சபாநாயகர்

சபையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை சில எம்.பி.க்கள் வாய் மொழியாக இழிவுபடுத்திய போது நான் சிரிக்கவில்லை.ஏனெனில் அப்போது நான் சபா பீடத்தில் இருக்கவேயில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ரோஹிணி குமாரி கவிரத்ன எம்.பி.நேற்று செவ்வாய்க்கிழமை ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் விதத்தில் சபாநாயகர் நடந்து கொண்டதாக கூறியிருந்த நிலையில்,அது குறித்து விளக்கமளிக்கும் போதே இதனை கூறினார்.

ஜூலை 20 ஆம் திகதி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின்போது உரையாற்றிய தலதா அத்துகோரல எம்.பி.யை சில எம்.பி.க்கள் தவறான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி விமர்சித்ததாகவும் அப்போது சபாபீடத்திலிருந்த நான் சிரித்துக் கொண்டிருந்ததாகவும் கூறினார்.

அத்துகோரல எம்.பி.யை சில எம்.பி.க்கள் தவறான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி விமர்சித்த போது நான் சிரித்ததாக கூறும் கூற்றை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.அந்த நேரத்தில் நான் சபாபீடத்தில் இருக்கவில்லை என்பதை ரோஹிணி குமாரி கவிரத்ன எம்.பி.க்கு தெரிவிக்கின்றேன்.எனவே இவ்வாறான தவறான கூற்றுக்களை அக்கிராசனம் மீது முன்வைப்பது அக்கிராசனத்துக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும்.அத்துடன் அவமதிக்கும் செயலாகும் என்பதையும் குறிப்பிட்ட எம்.பி.க்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என்று சபாநாயகர் தெரிவித்தார்.