
வடக்கில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைய அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச்சட்டமே காரணமெனவும் யாழ். மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் ஆசனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டாம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
வடக்கின் யாழ்.மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக உள்ள நிலையில், வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததை அடிப்படையாகக் கொண்டு அந்த எண்ணிக்கையை 6 ஆக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தயவு செய்து இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
யுத்த காரணிகளினால் வடமாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டதால் இலட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தனர். இன்று கூட தமிழகத்தில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாகவுள்ளனர்.வெளிநாடுகளிலும் இலட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்துள்ளனர்.இவர்கள் வடமாகாணத்தில் மீள வந்து வாழ விரும்பினாலும் அரசின் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் அச்சமடைகின்றனர்.அதேபோன்று வடக்கை சேர்ந்த பலர் நாட்டின் பல பகுதிகளில் வாழும் நிலையில் வடக்கே வந்து மீண்டும் வாழ இந்த பயங்கரவாத தடைச் சட்டமே தடையாகவுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.