July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விசாரணை செய்வதற்கான குறிப்பிட்டதொரு தினத்தை ஒதுக்குவதற்கு நடவடிக்கை’

உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு குறிப்பிட்ட திகதியை நிர்ணயிக்க நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பிறகு உடன்பாடு எட்டப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதான பத்திரன தெரிவித்தார்.

குறிப்பிட்ட தினத்தில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவும்,அந்த வழக்குகளை அடையாளம் காணும் முறையை வகுப்பதற்காகவும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை இலக்கம் 449 இன் அடிப்படையில் ஜூன் மாதம் 28 ஆம் திகதியன்று அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அச்சபையின் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்களை நீதிமன்றத்திற்கு வரவழைக்காமல் பிற தொலைதூர இடங்களில் தொடர்புடைய ஆதாரங்களை வழங்க ஒவ்வொரு மாகாணத்திலும் ஒன்பது நிகழ்நிலை வடிவிலான பதிவு மையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.மேலும், மேற்கண்ட இடங்களில் நேரடி சாட்சிப்பதிவு மையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் தலைவர் இக்குழுவுக்கு மேலும் தெரிவித்தார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை 2019 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர்,அதைச் செயல்படுத்துவதற்கான செயற்திட்டம் 10 தொடர்புடைய அமைச்சுக்களின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய தரவுத்தளத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம்,பாலியல் துஷ்பிரயோகம், அடிமைத்தனம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்தவும்,புதிய சட்டங்களை கொண்டு வரவும் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து ஆரம்பிக்கவும் ஒன்றியம் வழிநடத்தும் என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தவிசாளர் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே இதன்போது தெரிவித்தார்.