முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை சட்டமா அதிபர் திணைக்களம், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட நீதவான்கள் குழாமுக்கு இன்று அறிவித்துள்ளது.
11 இளைஞர்களை கடத்தி, காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்டிருந்த வழக்கின் 14 ஆவது பிரதிவாதியாக வசந்த கரன்னாகொட பெயரிடப்பட்டிருந்தார்.
வசந்த கரன்னாகொட மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட தொடர்பான சட்டமா அதிபரின் நிலைப்பாடு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்படவுள்ளது.