இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
இதனிடையே சிறுவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற தடுப்பூசி வகைகளில் பைசர் தடுப்பூசி முதலிடம் வகிப்பதாக இது தொடர்பான ஆய்வுகள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலைகளை மீண்டும் திறக்கும் நோக்கில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு கல்வி அமைச்சு கோரியுள்ளதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்
இதன்படி, 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வழங்குவதற்கான தடுப்பூசிகளின் சாத்தியத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் கூறினார்.
எனினும் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், சிறுவருக்கு பொருத்தமானதாக பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு தடுப்பூசியின் செயல் திறனையும் ஆய்வு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய ஆய்வுகளின் படி, பைசர் தடுப்பூசி சிறுவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற தடுப்பூசி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக தோன்றுவதாகவும் அவர் கூறினார்.
அத்தோடு எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஔடத கட்டுப்பாடுகள் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.
இதேவேளை, 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இம்மாதம் 15 ஆம் திகதிக்குள் தடுப்பூசியின் 1 வது டோஸையும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் 2 வது வாரத்திற்குள் தடுப்பூசியின் 2 வது டோஸையும் வழங்க முடியும் என இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டார்.