July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘விசாரணைகள் இன்றி 94 நாட்களாக என்னை அறையில் மூடி வைத்துள்ளனர்’: பாராளுமன்றத்தில் ரிஷாட்

விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் தான் 94 நாட்களாக மூடிய அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் 100 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த எம்.பி ஏன் கைது செய்யப்பட்டார் என்பது பாராளுமன்ற சிறப்புரிமைகள் சரத்துக்கமைய சபாநாயகருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில், சில விடயங்கள் தொடர்பில் தான் சபையில் உரையாற்ற, சபாநாயகரிடம் ரிஷாட் பதியுதீன் அனுமதி கோரியதைத் தொடர்ந்தும், இரண்டு நிமிடங்கள் உரையாற்ற சபாநாயகர் அவருக்கு வழங்கியுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, சபையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரும் இருந்துள்ளனர்.

தான் ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் 5 நாட்களே விசாரணைகள் நடைபெற்றதாகவும் ரிஷாட் தெரிவித்துள்ளார்.

“நான் கைது செய்யப்பட்டு இன்றுடன் 122 நாட்கள் ஆகும் நிலையில், அவற்றில் 94 நாட்கள் என்னை அறையில் மூடி வைத்துள்ளனர். 24 மணிநேரமும் அந்த அறை மூடப்பட்டுள்ளது.

மலசல கூடத்திற்கு மட்டுமே வெளியே வர அனுமதிக்கின்றனர். ஆனால், இன்று வரையில் எந்தவித விசாரணைகளும் நடைபெறவில்லை.

என்னை ஏன் கைது செய்தீர்கள் என்று பொறுப்பதிகாரியிடம் கேட்ட போது, எனது அமைச்சின் மேலதிக செயலாளர் பாலசுப்பிரமணியத்துடன் ஒன்றரை நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடியமை தொடர்பாகவே கைது செய்ததாக கூறினார்.

இதனை தவிர வேறு எந்தக் காரணத்தையும் முன்வைக்கவில்லை” என்று சபையில் ரிஷாட் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, “உங்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு நிமிடங்களும் முடிந்துவிட்டது” என்று சபாநாயகர் அறிவித்து, அவரது ஒலிவாங்கியும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் உரையாற்றுவதற்கு அனுமதி ரிஷாட் பதியுதீன் எம்.பி. அனுமதி கோரிய போதும், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.