
இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் மருத்துவ ரீதியான சுனாமி ஒன்றை நோக்கி நகர்வதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஜூலை மாதம் ஆரம்பத்தில் கொழும்பில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்படுவோரில் 20- 30 வீதமானோருக்கே டெல்டா தொற்று இருந்ததாகவும், தற்போது 75 வீதமானோர் டெல்டா தொற்றுடன் அடையாளம் காணப்படுவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பமாக ஒரு சிகிச்சை பிரிவில் 4 ஒக்சிஜன் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இப்போது அந்த தொகை 12 வரை அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒக்சிஜன் கையிருப்பைவிட ஒக்சிஜன் தேவையுடையோர் அதிகரித்து வருவதாக கொழும்பில் உள்ள வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் டெல்டா வைரஸ் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றாளர்களைப் போன்றே நாளாந்த உயிரிழப்பு வீதமும் அதிகரித்துச் செல்வதாக சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.