November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு நல்லூர் திருவிழாவை நடத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’

சுகாதார விதிமுறைகள், அறிவுறுத்தல்கள்,வழிகாட்டல்களை முழுமையாகவும், இறுக்கமாகவும் பின்பற்றி பக்தி பூர்வமாக நல்லூர் கந்தன் பெருந்திருவிழா நடைபெற பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லூர்க் கந்தன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில்,அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார் .

நல்லை கந்தப் பெருமானின் வருடாந்த பெருந் திருவிழாவானது இம்மாதம் 13 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இவ்வேளையில் நாடெங்கும் ஏற்பட்டுள்ள கொடிய கொரோனா தொற்றின் தீவிர பரவல் நிலையை கருத்தில் கொண்டு தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார சட்ட நடைமுறைகள், விதிமுறைகள், அறிவுறுத்தல்கள்,வழிகாட்டல்களை முழுமையாகவும், இறுக்கமாகவும் பின்பற்றி அமைதியாக ஆடம்பரமின்றி
பக்தி பூர்வமாக இப்பெருந்திருவிழா நடைபெற பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும்,இக்கால சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது விடுக்கப்படும் சுகாதார அறிவுறுத்தல்களை சிரமங்கள் பாராது,பொறுப்புணர்வுடன் கடைப்பிடித்து வரும் நாளில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்க்க பெருமனத்துடன் உதவ வேண்டுமென்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.