
மாகந்துரே மதுஷ் திட்டமிட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனூடாக போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வர்த்தகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த ஒன்றரை வருடங்களாக பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த பிரபல குற்றக் கும்பலின் முக்கியஸ்தரான மாகந்துரே மதுஷ் இன்று அதிகாலை கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் பொலிஸாருக்கும் குற்றக் கும்பலொன்றுக்கும் இடையே நடந்த பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இன்று பாராளுமன்றில், எதிர்க்கட்சியினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தனர்.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான நளின் பண்டார தெரிவிக்கையில், ”மதுஷ் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னால் நாடகமொன்றே இருந்துள்ளது. பொலிஸாருக்கு அந்த நாடகத்தை சரியாக இயக்க முடியாது போயுள்ளது. இவர் கொல்லப்பட்டதன் மூலம் நாட்டில் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டிருந்த அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுவிட்டன” என்றார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் எம்.பியான ஜே.வி.பி உறுப்பினர் விஜித ஹேரத் உரையாற்றுகையில், ”மாகந்துரே மதுஷ் கைது செய்யப்பட்ட காலப்பகுதியில் அவருடன் தொடர்புகளை வைத்திருந்த 80 அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் இருப்பதாக கூறப்பட்டது. இதன்படி அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பான பல உண்மைகள் வெளிவந்திருக்கும். ஆனால் அரசாங்கத்தின் வழமையான கொலை முறைமையில் அவரை கொன்று உண்மைகளை மறைத்துள்ளனர்” என்றார்.