July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வனவிலங்கு தாக்குதல்களுக்கான இழப்பீட்டு தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் பொறிமுறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இழப்பீடுகளை அதிகரிப்பது தொடர்பில் வனசீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை (02) நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய வனவிலங்கு தாக்குதலால் உயிரிழப்பவர்களுக்கு இதுவரை செலுத்தப்பட்ட 5 இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகையை பாலின மற்றும் வயது வேறுபாடின்றி 10 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை இணங்கியுள்ளது.

இது போன்ற தாக்குதலில் பகுதியளவில் அங்கவீனமுறும் அல்லது உடல் உபாதைகளுக்கு உள்ளாகுபவர்களுக்கு இதுவரை 75 ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த தொகையை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, காட்டு யானை தாக்குதலால் ஏற்படும் வீடு மற்றும் சொத்து சேதங்களுக்கு இழப்பீட்டு தொகையை 2 இலட்சம் ரூபா வரையில் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இவ்வாறான சேதங்களுக்கு இதுவரையில் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு வனவிலங்குகளான யானைகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு எருதுகள் மற்றும் முதலைகள் தாக்குதல் காரணமாக உயிரிழக்கும் மற்றும் முழுமையான அல்லது பகுதியளவில் அங்கவீனமுறும் நபர்களுக்கும், வீடுகள் மற்றும் சொத்துகள் சேதங்களுக்கும் இந்த புதிய இழப்பீடு வழங்கும் பொறிமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.