July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரந்தலாவ பிக்குகள் கொலை: 34 வருடங்களின் பின்னர் நடக்கும் விசாரணைகள்!

1987 ஆம் ஆண்டில் அம்பாறை அரந்தலாவ பகுதியில் இடம்பெற்ற பிக்குகள் கொலை சம்பவம் தொடர்பில் தற்போது முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த தாக்குதலின் போது படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பிய ரிதிமாலியத்த புத்தசார தேரரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி அவந்தி பெரேரா, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் ரிதிமாலியத்த புத்தசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை அடுத்துவரும் வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1987 ஜூலை 02 ஆம் திகதி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக கூறப்படும் அந்தத் தாக்குதலில் 31 பிக்குகளும், சிவிலியன்கள் மூவரும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க உத்தரவிட வேண்டும் என்பதுடன், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்றும் கோரி, அந்த சம்பவத்தில் உயிர் தப்பிய ரிதிமாலியத்த புத்தசார தேரர், 34 வருடங்களின் பின்னர் 2020 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர், தேசிய புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அரந்தலாவ படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களை பெறுமாறு 2020 ஒக்டோபர் மாதத்தில் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருந்தார்.
இதற்கமைய குற்றப் புலனாய்வு பிரிவினரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், சட்டமா அதிபர் தரப்பினரால் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.