July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு’: வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டாக்டர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ். வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 120 ஒக்சிஜன் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா நோயாளர்களின் அதிகரிப்பால் ஒக்சிஜன் சிலிண்டர்களின் பாவனை 180 ற்கு மேல் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் மூன்றுக்கு அதிகமான தடவைகள் வாகனங்கள் மூலம் அனுராதபுரம் சென்று, ஒக்சிஜன் சிலிண்டர்களைப் பெற்று வருவதாகவும் யாழ். வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திலும் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், மருத்துவ வளங்கள் அனைத்தும் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படுவதாக டாக்டர் சண்முகநாதன் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி போடாதவர்கள் அதிகமாக உயிரிழப்பதால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.