
நீண்ட காலமாக இராணுவ முகாம் அமைந்திருந்த தனியாருக்கு சொந்தமான காணியினை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (03) மட்டக்களப்பு மாவட்டத்தில் கும்புறுமூலை இராணுவ முகாமில் இடம்பெற்றது.
இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கும்புறுமூலை பகுதியில் நீண்ட காலமாக இராணுவ முகாம் அமைந்திருந்த சுமார் 12 ஏக்கர் காணியே இவ்வாறு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாவட்ட அரசாங்க அதிபருடன் இணைந்து காணிக்கான உரிமைப் பத்திரத்தை உரிமையாளர்களிடம் கையளித்தனர்.
காணிகளை வழங்குவதற்கு உதவிய ஜனாதிபதி,இராணுவ தளபதி மற்றும் அரச அதிகாரிகளுக்கு காணி உரிமையாளர்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் 23 ஆவது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த, 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.