
Photo: Sathosa Lanka Facebook
களுத்துறை களஞ்சியசாலை வீதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்தில் பட்டர் பக்கற்றுகளை திருடிச் செல்வதற்கு முயற்சித்த நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் களுத்துறை – நாகொட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
கடந்த 31 ஆம் திகதி சதொச விற்பனை நிலையத்திற்கு வந்த சந்தேக நபர் 1360 ரூபா பெறுமதியான பட்டர் பக்கற்றுக்கள் இரண்டை திருடிச் செல்ல முயன்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த சதொச விற்பனை நிலையத்தின் முகாமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகை தந்து சந்தேக நபரை கைது செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபர் போத்தல் ஒன்றை உடைத்து பொலிஸ் அதிகாரியொருவரை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த பொலிஸ் அதிகாரி சந்தேக நபரின் முழங்கால்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே, பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தினால் காயமடைந்த சந்தேக நபர் நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரியும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை, களுத்துறை பதில் நீதவான் பந்துல வீரசிங்க, நாகொட மருத்துவமனைக்கு சென்று விசாரணைகளை நடத்தியதுடன், சந்தேக நபரை எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.