January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் நாடு மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்’; மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை!

நாட்டில் “டெல்டா” தொற்று பரவலுடன் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவது நாட்டை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும் என மருத்துவ நிபுணர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.

நாட்டில் தடுப்பூசி திட்டம் முழுமையடைந்ததன் பின்னர் கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியிருக்க வேண்டும். தற்போது பதிவாகி வரும் கொவிட் தொற்று தினசரி எண்ணிக்கை குறைவடைய மேலும் 4 -8 வாரங்கள் ஆகலாம் என சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தற்போதைய மோசமான சூழ்நிலையில், முக்கிய முடிவுகளை எடுப்பவர்களை எச்சரிப்பது தமது சங்கத்தின் முக்கிய பொறுப்பாக உணர்வதாக அவர் குறிப்பிட்டார்.

கொவிட் கட்டுப்பாடுகளின் போது அவற்றை பின்பற்றாதவர்கள், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டால் மேலும் பொறுப்பற்றவர்களாக நடந்து கொள்ள வழிவகுக்கும். இது நாட்டின் தொற்று நிலையை மேலும் மோசமாக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகரித்து வரும் கொவிட் -19 எண்ணிக்கைகளின் பின்னணியில், கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் குறிப்பாக “டெல்டா” மாறுபாட்டை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை கோர வேண்டிய கட்டாயத்தில் தமது சங்கம் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அத்தோடு, நோயாளிகளின் அதிவேக அதிகரிப்புடன் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நாட்டின் சுகாதார வளங்களின் திறன் நெருக்கடியை சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்து வருவதால், சில நாட்களாகும் போது ஒட்சிசன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார்.