
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய போது சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தொடர்பாக பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் பொலிஸ் குழுவினர் அந்த சிறுமி தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது, அங்குள்ள சுவரொன்றில் ஆங்கில எழுத்துக்கள் மூலம் ‘எனது மரணத்திற்கு காரணம்’ என்ற வரிகள் அடங்கிய வசனங்கள் இருப்பதை அவதானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைப் பிரிவினர் விசேட அவதானத்தை செலுத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வசனம் சிறுமி ஹிஷாலினியால் எழுதப்பட்டதா? என்பதனை கண்டறிய அவர் பாடசாலை செல்லும் காலத்தில் பயன்படுத்திய பாடக் கொப்பிகளை ஆராய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறுமியின் மரணம் தொடர்பான இரண்டாவது பிரேத பரிசோதனை முடிவடைந்துள்ள நிலையில் அது தொடர்பான அறிக்கையை விசேட மருத்துவ நிபுணர்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளனர்.