விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலும் நாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசு எடுத்துள்ள தீர்மானத்தால் நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாப்பு கிடைக்குமா?கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்பத்திலிருந்து அரசு சரியான தீர்மானங்களை எடுத்துள்ளதா அல்லது தமக்கு தேவையான தீர்மானங்களை எடுத்துள்ளதா?
கொரோனா வைரஸ் பரவலில் அபாயகரமான நாடுகளின் பட்டியலில் நாம் உள்ளோம்.நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் தீர்மானங்களால் விசேடமாக தொற்று நோய் தொடர்பில் விசேட நிபுணர்கள் கூறும் அறிவுரைகள், அதேபோன்று உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளை பின்பற்றி நடக்காத நாடுகளில் மக்களுக்கு தங்களது உயிரை பணயம் வைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதற்கு சிறந்த உதாரணம் அமெரிக்கா.அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காலப் பகுதியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்தது.அவரது தனிப்பட்ட தீர்மானங்கள் காரணமாக விசேட நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு செவிமடுக்காது,உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாது நாட்டில் முன்னெடுத்த நடவடிக்கைகளால் அமெரிக்க மக்களில் ஐந்து இலட்சம் பேர் தங்களது உயிரைக் கொரோனாவுக்கு பணயம் வைத்தனர்.
அதேபோன்று கொரோனா வைரஸ் பரவலால் பெருமளவு மக்கள் உயிரிழந்த அடுத்த நாடாக பிரேஸில் காணப்படுகின்றது.பிரேஸில் நாட்டின் தலைவரும் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் வைத்திய நிபுணர்களின் அறிவுரைகளைப் பின்பற்றாது தான் நினைக்கும் வகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தார்.
இன்று பிரேஸில் நாட்டில் அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.இவ்வாறான உதாரணங்கள் அதிகளவில் உள்ளன.
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ளதும் அதேபோன்றதொரு நிலைமைதான்.அரசை ஆளுபவர்கள் தாங்கள் நினைக்கும் வகையில் செயற்படத் தொடங்கியுள்ளனர்.விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலும் நாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.