July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் நெருக்கடியிலும் இலங்கை வங்கி இலாபத்தை ஈட்டியுள்ளது

இலங்கை வங்கி இந்த வருடம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முதலாவது காலாண்டிற்குள் 19,656 மில்லியன் வரியற்ற இலாபத்தை ஈட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் வெளிப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டு இலங்கை வங்கி 29,685 மில்லியன் ரூபாவை வருடாந்த இலாபமாக ஈட்டியிருப்பதுடன், 2020 ஆம் ஆண்டு வருடாந்த இலாபமாக 23,552 மில்லியன் ரூபா ஈட்டியிருப்பதாக நிதி அமைச்சினால் 2021 நடுப்பகுதி வரையான காலப்பகுதிக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டபோது புலப்பட்டது.

கொவிட் 19 சூழலுக்கு மத்தியில் அரசாங்க வங்கி ஒன்றினால் இவ்வாறு இலாபம் ஈட்ட முடிந்தமை இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் பாராட்டப்பட்டதுடன், உலகளாவிய ரீதியில் சிக்கலான சூழலுக்கு முகங் கொடுத்திருக்கும் நிலையில் தமது வாடிக்கையாளர்கள் கஷ்டத்துக்கு முகங் கொடுத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு நிவாரணங்களை வழங்க முன்வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா தெரிவித்தார்.

2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்பு) (திருத்தச்) சட்டத்தின் 10 வது சரத்திற்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை ஊடாக நாட்டின் பொருளாதார சூழல்,அரசாங்கத்தின் நிதி அதிகாரம்,அரசுடமை நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் வெளிநாட்டு நிதியளித்தல் போன்றவற்றின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை விரிவாக விளங்கப்படுத்துவது நிதி அமைச்சின் ஊடாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம்,2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி சட்டத்துக்கு அமைய அரசாங்கத்தினால் 2017.10.26 ஆம் திகதி 1 ஆம் இலக்க 2042/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை திருத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள 2228/833 மற்றும் 2021.02.20 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலுக்கும் இக்குழு அனுமதி வழங்கியது.