கொவிட் தொற்றுப் பரவலுக்கு எதிராக இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கும், அமெரிக்கத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி அரசியல் தலைவர் தமார்கஸ் காப்பென்டர் மற்றும் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிசெயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு நாட்டுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கை உட்பட உலக நாடுகளில் உயிர்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் கொவக்ஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்கா உதவி வழங்கும் என்று அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்காலத்தில் நாட்டின் எரிசக்தித் துறையில் அமெரிக்காவினால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
உரிய அமைச்சுடன் தற்போதும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்கட்டியுள்ள அலெய்னா பி.டெப்லிட்ஸ், விரைவில் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையில் தற்பொழுது காணப்படும் தேர்தல் முறையை மாற்றுவதற்காக பாராளுமன்றத்தினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் தரப்பில் காரணிகளை எடுத்துக்கூறியுள்ளனர்.
இந்த பொறிமுறைகள் குறித்தும் அமெரிக்கா மகிழ்ச்சியடைவதாக தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.