இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் தாக்கங்களை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் திருமண நிகழ்வுகள், பொது நிகழ்வுகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கொவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கு வலியுறுத்தியுள்ளார்.
நாடு மிகவும் அச்சுறுத்தலான கட்டத்தில் உள்ளது, தடுப்பூசிகளை ஏற்றுவது நல்ல விடயம் என்றாலும், அது மட்டுமே பாதுகாப்பு அல்ல. மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றி தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எதிர்வரும் மாதங்கள் எமக்கு சவால் மிக்கவை என்பதையே நிபுணர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே எமது சுகாதார தன்மைகள், எம்மால் தாக்குப்பிடிக்க முடிந்த அளவு என்பவற்றை கருத்தில் கொண்டே தீர்மானம் எடுக்க வேண்டும். இந்தியா போன்று ஒரு நிலை இலங்கையில் ஏற்பட்டால் எம்மால் நிச்சயமாக தாக்குப்பிடிக்க முடியாது என உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது உள்ள நிலைமையில் திருமண நிகழ்வுகள், ஏனைய மத, கலாசார நிகழ்வுகள், பொது நிகழ்வுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதற்கான அறிவிப்பை நாம் கொவிட் செயலணிக் கூட்டத்தில் விடுத்துள்ளோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.